மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
திருக்கோவிலூர்
ரகசிய தகவல்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியின் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர்.
மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை
பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரகண்டநல்லூர் மகாத்மா காந்தி வீதியை சேர்ந்த முனுசாமி மகன் காட்டுப்பூச்சி என்கிற முத்து(வயது 23) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும், பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தொியவந்தது.
இதையடுத்து காட்டுப்பூச்சியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவருக்கு கஞ்சா எங்கிருந்து கிடைக்கிறது? கஞ்சா பழக்கத்துக்கு ஆளான மாணவர்கள் யார்? யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
அரகண்டநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவது ஒன்றும் புதிது அல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளுடன் தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் கஞ்சா விற்பனை செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.