ரூ.1¼ லட்சம் செல்போன்களை திருடிய வாலிபர் கைது


ரூ.1¼ லட்சம் செல்போன்களை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:46 PM GMT)

நாகையில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் கடையின் பூட்டை உடைக்க தேவையான கருவிகளை ஆன்லைனில் வாங்கி உள்ளார்.

நாகப்பட்டினம்

நாகையில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் கடையின் பூட்டை உடைக்க தேவையான கருவிகளை ஆன்லைனில் வாங்கி உள்ளார்.

செல்போன்கள் திருட்டு

நாகை, வெளிப்பாளையம் ராமநாயக்கன் குலத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது30). இவர் பப்ளிக் ஆபீஸ் சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். கடந்த 13-ந் தேதி இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

தனிப்படை

இதுகுறித்து ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார், திருட்டுபோன செல்போன்களின் ஐ.எம்.ஐ நம்பர் வைத்து விசாரணை நடத்தினர். இதில் திருட்டு போன செல்போன்கள் தஞ்சையில் ஒரு கடையில் இருப்பது தெரியவந்தது.

திருட தேவையான கருவிகளை ஆன்லைனில் வாங்கினார்

இதையடுத்து தஞ்சையில் உள்ள கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இந்த செல்போன்களை தன்னிடம் தஞ்சை மகர்நோம்புச்சாவடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த குமரேசன்(29) என்பவர் தான் விற்பனை செய்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து குமரேசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ரமேஷ்குமார் கடையில் செல்போன்களை திருடியதும், பூட்டை உடைக்க தேவையான கருவிகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கியதும் தெரிய வந்தது.

வாலிபர் கைது

பின்னர் தனிப்படை போலீசார், குமரேசனை கைது செய்தனர். மேலும் அவர் திருடிய ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 16 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


Next Story