புல்லூர் தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி

வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.
நண்பர்களுடன் குளித்தார்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் தனுஷ் (வயது 17). கட்டிட தொழிலாளி. நேற்று இவர், தனது நண்பர்கள் 4 பேருடன் தமிழக- ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள புல்லூர் தடுப்பணைக்கு சென்றுள்ளார்.
அங்கு தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது தனுஷ் உள்பட 2 பேர் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். அவர்களை மீட்க நண்பர்களும், அங்கிருந்தவர்களும் போராடி உள்ளனர்.
நீரில் மூழ்கி சாவு
அதில் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டார். தனுஷ் நீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அங்கு வந்த குப்பம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தனுசை பிணமாக மீட்டனர்.
போலீசார், தனுஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தடுப்பனையில் கடந்த 8 மாதத்தில் 10 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். எனவே இரு மாநில அரசுகளும், பொதுமக்களுக்கும், அங்கு வரும் பக்தர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.