பொதட்டூர்பேட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
பொதட்டூர்பேட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே சவுட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன் விஜி (வயது 25)
பி.எஸ்.சி. பட்டதாரி. இவர் அந்த பகுதியில் விசைத்தறி கூடம் நடந்தி வந்தார். நேற்று மாலை இவர் விசைத்தறி கூடத்திற்கு சென்று அங்கு ஏற்பட்ட மின்கசிவை பரிசோதிக்க சென்றார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் சுருண்டு விழுந்து மயங்கிய அவரை அங்கு இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த வாலிபர் விஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.