ரெயில் மோதி வாலிபர் பலி
பாபநாசம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி இறந்தார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா வளத்தாமங்களம் வடக்கு தெருவை சேர்ந்த பாலையன் மகன் சாயிராம்(வயது 19). கட்டிட வேலை செய்து வந்த இவர், பண்டாரவாடை அருகே உள்ள உப்புகாரன் ரயில்வே கேட்டில் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற சாயிராம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாயிராம் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கும்பகோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் விரைந்து வந்து ரெயில் மோதி பலியான சாயிராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர்கள் மறியல்
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சாய்ராமின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாய்ராம் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இறந்தவரின் உடலை வளத்தாமங்கலம் மெயின் ரோட்டில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.