விபத்து ஏற்படுவதை தவிர்க்க புதர்களை அகற்றிய வாலிபர்கள்


விபத்து ஏற்படுவதை தவிர்க்க புதர்களை அகற்றிய வாலிபர்கள்
x
தினத்தந்தி 4 Sep 2023 9:30 PM GMT (Updated: 4 Sep 2023 9:30 PM GMT)

அத்திப்பாளி-நம்பாலக்கோட்டை சாலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க புதர்களை வாலிபர்கள் அகற்றினர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் இருந்து ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சிக்கு செல்லும் சாலையில் அத்திப்பாளி, நம்பாலக்கோட்டை பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில் பல மாதங்களாக சாலையோரம் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அத்திப்பாளி-நம்பாலக்கோட்டை சாலையோரம் புதர் சூழ்ந்து இருந்தது. இதனால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையோர புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அத்திப்பாளி, நம்பாலக்கோட்டை உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அத்திப்பாளி, நம்பாலக்கோட்டை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சாலையோர புதர்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, புதர் மண்டிய சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து கோரிக்கை விடுத்து அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்பார்த்து எந்த பலனும் இல்லை. இதனால் குழந்தைகள், மாணவர்களின் நலன் கருதி புதர்கள் வெட்டி அகற்றப்பட்டது. இதன் மூலம் விபத்து ஏற்படுவது தடுக்கப்படும் என்றனர்.


Next Story