பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. பெண் காவல் ஆய்வாளர் விசாரணை அதிகாரியாக நியமனம்


பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. பெண் காவல் ஆய்வாளர் விசாரணை அதிகாரியாக நியமனம்
x

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பெண் காவல் ஆய்வாளர் உலகராணி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் சிக்கி விசாரணைக்கு வரும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் பாய்ந்தது. மேலும் கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்ட அமுதா ஐ.ஏ.எஸ், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த இடைக்கால அறிக்கையின் படி, இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் ஆய்வாளர் உலகராணி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் குழுவினர் விரைவில் விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story