கதை சொல்லி அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்


கதை சொல்லி அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
x

கறம்பக்குடி அருகே விதவிதமான கதைகள் சொல்லி அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் கற்பனை திறனை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் டேனி திரைப்பட இயக்குனர் கலந்து கொண்டு பாராட்டினார்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

கதை சொல்லல் நிகழ்ச்சி

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம் என தொடங்கி ஏழு கடல் 10 மலைகளை கடந்த மந்திரவாதி கதை வரை சிறு வயதில் கதை கேட்டு வளர்ந்தவர் 40 வயதை கடந்தவர்களாக இருப்பர். ஆனால் தற்போது கதை சொல்ல வீடுகளில் தாத்தா, பாட்டிகள் இல்லை. இருந்தாலும் கதை கேட்கும் நிலையில் இன்றைய இளைய தலைமுறையினரும் இல்லை.

ஆனால் சமீப காலமாக இழந்துவிட்ட கலாசார பெருமைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தற்போது மாணவர்களிடையே கதை சொல்லும் பழக்கத்தினை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும் கதை கேட்டலின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும வகையில் கதை சொல்லல் நிகழ்ச்சி கறம்பக்குடி அருகே உள்ள ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாணவர்கள் குழுவாக கதை எழுதினர்

இந்த நிகழ்வில் டேனி திரைப்பட இயக்குனர் சந்தானமூர்த்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு நாட்டார் கதைகள், வாழ்வியல் கதைகள் போன்ற பல்வேறு வகையான கதைகளை கூறினார். பிறகு அந்தக் கதைகள் குறித்து மாணவர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கு விளக்கங்களை இயக்குனர் கூறினார். பின்னர் மாணவர்களும் தங்களுக்கு தெரிந்த, தாத்தா, பாட்டிகளிடம் கேட்ட கதைகளை கூறினர். மாணவர்கள் சொன்ன கதைகளில் சில கதைகள் பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி தற்போதைய மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் நெகிழ்சியானதாக இருந்தது.

இதையடுத்து மாணவர்களை 5 அணிகளாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் வாழ்வியல் சார்ந்த பெயர்களான பள்ளிக்கூடம், பொட்டுக்கடலை, விவசாயம், காட்டாறு, நெல்வயல் என பெயரிடப்பட்டது. இதில் மாணவர்கள் குழுவாக கலந்துரையாடி சொந்தமாக கதை ஒன்றை எழுதி அதை சுவராஸ்யமாக கூறினர்.

இயக்குனர் பாராட்டு

அன்பு, மது ஒழிப்பு, இயற்கை வள பாதுகாப்பு மக்களின் மனநிலைகள் ஆகிய தலைப்புகளில் வாழ்வியல் சார்ந்தும், சமூக பிரச்சினைகளை மையப்படுத்தியும் கதைகள் சொல்லப்பட்டன. இதை கேட்ட இயக்குனர் சந்தானமூர்த்தி மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.

சிறுவயதில் மாணவர்களின் கற்பனை திறன் மற்றும் சமூக பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள், கல்வி ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story