அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர்

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அமணலிங்கேஸ்வரர் கோவில்

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவி்லில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும், மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர்.

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

ஆடி அமாவாசை

அந்த வகையில் நேற்று ஆடி அமாவாசையை யொட்டி மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக விவசாயிகள் மாட்டு வண்டிகளில் திருமூர்த்திமலைக்கு வந்தனர். அதுமட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் மும்மூர்த்திகள், விநாயகர், முருகன், சப்த கன்னிகளையும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பொதுமக்கள் சிலர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து பிண்டம் வைத்து திதியும், தர்ப்பணமும் கொடுத்தனர். இதனால் பஞ்சலிங்க அருவி, கோவில் வளாகம், அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அமாவாசையை யொட்டி போக்குவரத்து கழகத்தின் சார்பில் உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோவில் வரை பஸ்கள் இயக்க கோரிக்ைக

ஆனால் பஸ்கள் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் வயதான பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்ததுடன் அவதிக்கு உள்ளாகி வந்தனர். ஒவ்வொரு முறையும் விசேஷ நாட்களின் போது அரசு பஸ்கள் கோவில் வரையிலும் இயக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கை தற்போது வரையிலும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story