மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டிதர்மபுரி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சங்கடஹர சதுர்த்தி
தர்மபுரி பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களிலும் நேற்று மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தந்த கோவில்களில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற சாலை விநாயகர் கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு முத்தங்கி அலங்கார சேவையும், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பாக திருவீதி உலா நடைபெற்றது.
சிவசக்தி விநாயகர் கோவில்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற மஹா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மேல் தோப்பு தெருவில் உள்ள செல்வகணபதி கோவில் மற்றும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகர் விநாயகர் கோவில், அன்னசாகரம் விநாயகர் கோவில், கடைவீதி தேர்ப்பேட்டை ஏலூர் பிள்ளையார் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் நடைபெற்ற மஹா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.