திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்கு பின்னர் தெப்ப தேர் திருவிழா இன்று நடக்கிறது


தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்கு பின்னர் தெப்ப தேர் திருவிழா இன்று நடக்கிறது

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோட்டில் உள்ள ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நகராட்சியால் நிர்வகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது தெப்ப தேர் திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 51 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப தேர் திருவிழா நிறுத்தப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு வரை தெப்ப திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நாளை (சனிக்கிழமை) கம்பம் எடுக்கப்பட்டு தெப்பக்குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) தெப்ப தேர் திருவிழாவை நடத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து விழா நடத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யாவிடம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, நகராட்சி துணைத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மனு கொடுத்தனர். பின்னர் விழா நடத்துவது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் கணேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி இன்று தெப்ப திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 51 ஆண்டுகளுக்கு பின்னர் தெப்ப தேர் திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story