பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் லட்சார்ச்சனை விழா
பரமத்திவேலூர்:
பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் 71-ம் ஆண்டு கார்த்திகை மாத லட்சார்ச்சனை மற்றும் வனபோஜனம் விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று நிறைவுபெற்றது. விழாவையொட்டி தினந்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் வனபோஜன மஞ்சள் இடிப்பும், லட்சார்ச்சனை பூர்த்தியும், அன்னப்பாவாடையும், திருக்கோடி தீபம் ஏற்றுதலும், சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை 9 மணிக்கு சர்வத்திர திருமஞ்சனம், தாத்ரி நாராயண திருமஞ்சனம், தாத்ரி நாராயண வனபோஜனமும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் மாலை 7 மணிக்கு திருக்கோடி தீபம் ஏற்றுதலும் நடைபெற்றது. விழாவில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.