ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமி மஞ்சள்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் நரசிம்மசாமி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோட்டை முனியப்பசாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் பாலதண்டாயுதபாணி சாமி கோவில், மாருதிநகர் ராஜகணபதி கோவில், அழகுநகர் சக்தி மாரியம்மன் கோவில், பொன்விழா நகர் முத்துமாரியம்மன் கோவில் என நகர் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் செங்கோட்டு வேலவர், ஆதிகேசவபெருமாள், அர்த்தநாரீஸ்வரர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோவில் முழுவதும் மாவிலை மற்றும் வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மார்கழி வழிபாட்டு குழு சார்பில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் திருச்செங்கோட்டில் கைலாசநாதர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், சின்ன ஓங்காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராசிபுரம், நாமகிரிப்பேட்டை

ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்தனர். ஆங்கில புத்தாண்டையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வெள்ளிகவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் ராசிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சாமி ரூபாய் நோடு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் அங்குள்ள அங்காளம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து தரிசனம் செய்தனர். மேலும் நாமகிரிப்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், ஆர்.புதுப்பட்டி சூடாமணி அம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், சிராப்பள்ளி செவந்தீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூர்

இதேபோல் மோகனூர் பகுதியில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி மோகனூர் நாவலடியான் கோவில், காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள அசலதீபேஸ்வரர் கோவில், வெங்கட்ரமண பெருமாள் கோவில், காளியம்மன் கோவில், காந்தமலை முருகன் கோவில், வள்ளியம்மன் கோவில், சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவில், பிடாரி செல்லாண்டியம்மன் கோவில், எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில், அங்காளம்மன், கோவில், மணப்பள்ளி முனியப்பன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், குடிப்பாட்டு மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story