வைகுண்ட ஏகாதசியையொட்டிபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வைகுண்ட ஏகாதசியையொட்டிபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு

நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்யபூஜை நடந்தது. தொடர்ந்து ஆகம முறைப்படி பூஜை செய்து பட்டாச்சாரியர்கள் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கூடையில் வைத்து ஜடாரியை கொண்டு வந்தனர்.

அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், கோவில் உதவி கமிஷனர் இளையராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்தனர். காலை 11 மணி அளவில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் சாமி தரிசனம் செய்தார்.

54 ஆயிரம் லட்டு

நிகழ்ச்சியையொட்டி பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. சொர்க்க வாசல் திறப்பையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக நாமக்கல் மெயின் ரோட்டில் இருந்து பஸ் நிலையம் வழியாக பூங்கா சாலை வரை நீண்ட தூரத்துக்கு பொதுமக்கள் காத்திருந்து தரிசனம் செய்வதை காண முடிந்தது. நேற்று காலையில் கடும் குளிர் நிலவியபோதும் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. இதற்காக 54 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு இருந்தது. மேலும் சாமி தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது.

மேலும் கோவில் முன்பும், சாலைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டை போல சிறப்பு தரிசனத்திற்கு ரூ.25-ம், விரைவு தரிசனத்திற்கு ரூ.100-ம் வசூல் செய்யப்பட்டது. இதையொட்டி நாமக்கல் பிரதான சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்செங்கோடு

கொங்கு 7 சிவ தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பல்வேறு பொருட்களை கொண்டு மூலவர் மற்றும் உற்சவர் சாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் உற்சவர் கோவிலை வலம் வந்து சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு துளசி மற்றும் மலர்களை தூவி வழிபட்டனர். உற்சவரை பின ்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்குள் சென்று சாமியை வழிபட்டனர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தனியாக சொர்க்கவாசல் கிடையாது. வடக்கு ராஜகோபுர பாதையே சொர்க்க வாசலாக போற்றப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ராசிபுரம்

ராசிபுரம் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 5¼ மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடந்தது. சொர்க்கவாசல் வழியாக சேஷ வாகனத்தில் முத்தங்கி அலங்காரத்தில் உற்சவர் பொன் வரதராஜ பெருமாள் வெளியே வந்தார். அப்போது கருடாழ்வார் எதிர்கொண்டு அழைத்தார். உற்சவர் பொன் வரதராஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது திரளாக கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். பின்னர் உற்சவர் கோவில் பிரகாரத்தை சுற்றி உலா வந்தார்.

இதில் சின்ராஜ் எம்.பி., முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், நகர தி.மு.க. செயலாளர் சங்கர், நகர வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ராசிபுரம் ஜன கல்யாண் இயக்கம் சார்பில் 50 ஆயிரம் லட்டுகள் இயக்கத்தின் தலைவர் பரந்தாமன், செயலாளர் ராமமூர்த்தி ராகவன், ரமேஷ் முன்னிலையில் வழங்கப்பட்டது. மேலும் கரும்பு விற்பனையும் நடந்தது. ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.

குமாரபாளையம், பள்ளிபாளையம்

குமாரபாளையம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. குமாரபாளையம் காட்டூர் விட்டலபுரி பாண்டுரங்கநாதர் கோவில், காட்டூர் ராமர் கோவில், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சாமி கோவில், கோட்டைமேடு கோதண்ட ராமர் கோவில், தட்டான் குட்டை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டன. இதையடுத்து பஜனை வழிபாட்டு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பள்ளிபாளையம் காவிரி கரையோரம் உள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் திருவீதி உலா வந்தார். ராஜவீதி, பஸ் நிலைய ரோடு, சங்ககிரி சாலை வழியாக திருவீதி உலா நடந்தது.

காளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் அமைந்துள்ள சென்றாய பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. நேற்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சியளிக்கும் பெருமாளுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது. மேலும் திருக்கோடி தீபம் ஏற்றி, ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக காட்சியளிக்கும் பெருமாள், வீரபக்த ஆஞ்சநேயருடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார். ெசார்க்கவாசல் திறப்பையொட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு தம்பதி சமேதராக பெருமாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

நாமகிரிப்பேட்டையில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலையில் பெருமாள் பரபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆரிய வைசிய சமூகத்தினர் நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story