பாண்டமங்கலம்பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழாதிரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அலமேலு மங்கா, கோதநாயகி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தினந்தோறும் பல்லக்கு உற்சவம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருட சேவை, சேஷச வாகனம், யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம், புஷ்ப விமான புறப்பாடு மற்றும் குதிரை வாகனங்களில் சாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளளும், மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் சேகர் எம்.எல்.ஏ., பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர், வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 1-ந் தேதி வரை காலை 8 மணிக்கு பல்லக்கு உற்சவம், இரவு 7 மணிக்கு வராக புஷ்கரணியில் தீர்த்தவாரி, கெஜலட்சுமி வாகனம், வசந்த உற்சவம், புஷ்ப யாகம் மற்றும் படிச்சட்டத்தில் சாமி திருவீதி உலா புறப்பாடும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் சாமி கோவில் செயலர் அலுவலர், தக்கார், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.