நாமகிரிப்பேட்டை அருகேகள்ளவழி கருப்பணார் கோவில் திருவிழா3 ஆயிரம் பக்தர்களுக்கு அசைவ அன்னதானம்


நாமகிரிப்பேட்டை அருகேகள்ளவழி கருப்பணார் கோவில் திருவிழா3 ஆயிரம் பக்தர்களுக்கு அசைவ அன்னதானம்
x
தினத்தந்தி 6 Feb 2023 7:00 PM GMT (Updated: 6 Feb 2023 7:00 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆர்.புதுப்பட்டி கிராமம் போதமலை அடிவார பகுதியில் பழமையான கள்ளவழி கருப்பணார் கோவில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில் மலைவாழ் இனத்தை சேர்ந்தவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு கள்ளவழி கருப்பணாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட 46 கிடா, 22 பன்றிகள், 22 கோழிகள் (சேவல்கள்) பலியிடப்பட்டன. பச்சரிசி பொங்கல் வைக்கப்பட்டது. சுமார் 2,500 கிலோ இறைச்சி சமைத்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு அசைவு உணவை சமைத்தனர்.

பின்னர் கோவிலின் அருகில் உள்ள வயலில் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, வடுகம், பட்டணம், ராசிபுரம், சீராப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அசைவ உணவு சாப்பிட்டனர்.


Next Story