பாலக்கோடு அருகேகோவில் நிலத்தை அளக்க கிராம மக்கள் எதிர்ப்புஅதிகாரிகள் பேச்சுவார்த்தை
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே சிக்கார்தனஅள்ளி கிராமத்தில் பழமைவாய்ந்த கரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு போதிய வருவாய் இல்லாததால் பராமரிப்பு இன்றி காணப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவில் நிலத்தை பயன்படுத்தி வருபவர்கள் கோவிலுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பொது ஏலம் விட அறநிலைய துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏலம் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று 8 ஏக்கர் நிலத்தை மட்டும் நிலஅளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற சிக்கார்தானஅள்ளி கிராமத்துக்கு அறநிலைய துறை அதிகாரிகள், வருவாய் ்துறையினர் மற்றும் போலீசார் சென்றனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் நிலஅளவீடு செய்வதாக இருந்தால் 32 ஏக்கர் மொத்த நிலத்தையும் அளவீடு செய்து முறையாக பொது ஏலம் விட வேண்டும். ஒரு பகுதியை மட்டும் அளவீடு செய்யகூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கிராம மக்கள், அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வு ஏற்பட்ட பின் நிலஅளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினர். இதனை ஏற்று அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரும்பி சென்றனர்.