கிருஷ்ணகிரி திரவுபதி அம்மன் கோவிலில்அர்ச்சுனன் தபசு நாடக நிகழ்ச்சி
கிருஷ்ணகிரியில் பழையபேட்டை தர்மராஜா கோவில் தெருவில் 7 கிராமங்களுக்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த மகோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த மகோற்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், கிருஷ்ணன் பிறப்பு, பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, சுபத்திரா திருமணம் உள்ளிட்ட பல்வேறு இதிகாச மகாபாரத தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த மகாபாரத தெருக்கூத்தில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அர்சுனன் தபசு நாடகம் நடைபெற்றது. இதில் கவுரவர்களை கூண்டோடு அழிக்க சிவபெருமானிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற வேண்டி அர்சுனன் தபசு மரத்தின் கீழ் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தபின் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான கிராம மக்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் அர்ச்சுனன் ஒவ்வொரு படிக்கும் பாடல் பாடி தபசு மரம் ஏறினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.