ஆனங்கூரில்மாரியம்மன் கோவில் திருவிழா
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, கோவில் பூசாரி தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
1-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நேற்று அபிஷேகமும் நடந்தது. விழாவில் நேற்று பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து பால் குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் செல்லாண்டி அம்மன், அங்காளம்மன் கோவில்களில் அபிஷேகம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, வாணவேடிக்கையும் நடந்தது.
விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை கிடா வெட்டுதலும், மாலை அம்மன் வீதி உலா வருதல் மற்றும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆனங்கூர் மாரியம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.