திருச்செங்கோட்டில் விசாக திருவிழாவை முன்னிட்டுபத்ரகாளியம்மன் தேரோட்டம்சிறுவர்கள், பெண்கள் வடம்பிடித்து இழுத்தனர்
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு மலைக்கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி தேரில் பவனி வரும் வைகாசி விசாக தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவில் முதல் நிகழ்வாக நேற்று முன்தினம் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தேருக்கு எழுந்தருளும் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டத்தின்போது அனைத்து வீதிகளில் தெருவிளக்குகள், வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு இருக்கும். இதனால் இந்த தேரோட்டத்தை இருட்டு தேர் என பொதுமக்கள் அழைப்பர். தற்போது நாளடைவில் பெயர் மருவி திருட்டு தேர் என அழைக்கப்பட்டது. மேலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் இந்த தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக அரசு உத்தரவால் இருளில் இழுக்கபட்ட பத்ரகாளியம்மன் தேர் மாலையில் வெளிச்சத்தில் இழுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தொடங்கிய தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் நடேசன், ஊர் பிரமுகர்கள் ராஜகணபதி, ஊர்கவுண்டர் ராஜா உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள் கலந்து கொண்டு அம்மன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 4 ரதவீதிகள் வழியாக சென்ற தேர் மாலை 6.30 மணிக்கு நிலை சேர்ந்தது.