வளர்பிறை பஞ்சமியையொட்டிவராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வளர்பிறை பஞ்சமி
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வராகி அம்மன் கோவில்களிலும் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டவராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உபகார பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதை தொடர்ந்து அஷ்ட வராகி அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.
மகாகாளி வராஹி அம்மன்
இதேபோன்று தர்மபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தர்மபுரி அருகே மொடக்கேரி கிராமத்தில் 16 அடி உயரமுள்ள மகாகாளி வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற எலுமிச்சை, தேங்காய் மற்றும் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.