திருச்செங்கோட்டில் வைகாசி விசாகத்தையொட்டிஅர்த்தநாரீஸ்வரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் வைகாசி விசாகத்தையொட்டி அர்த்தநாரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம்
திருச்செங்கோட்டில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மலைக்கோவிலில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த திருவிழா 14 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.
விழாவில் 9-ம் நாள் நிகழ்வாக திருக்கல்யாணம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக கைலாசநாதர் கோவிலின் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டு வேலவர் திருக்கல்யாணம் நடந்தது.
சாமி தரிசனம்
தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், அர்ஜூனன், ஊர்கவுண்டர் ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவில் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு மற்றும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. வைகாசி விசாகத்தையொட்டி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.