இ.கே.புதூரில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


இ.கே.புதூரில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 8:03 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே இ.கே.புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இந்த கோவில் கும்பிஷேக விழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

தொடர்ந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான கும்பாபிஷேகத்தில் யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பின்னர் விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story