அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்


அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:46 PM GMT)

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக கால சம்ஹாரமூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள்.

சிவ பெருமானின் வீர திருவிளையாடல்கள் நடந்த தலங்களை அட்டவீரட்ட தலங்கள் என அழைக்கிறார்கள். இக்கோவிலும் சிவ பெருமானின் வீர திருவிளையாடல்கள் நடந்துள்ளதால் இக்கோவிலும் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் சிவன், எமனை காலால் எட்டி உதைத்ததாக தலவரலாறு கூறுகிறது.

ஆயுள் விருத்தி பூஜைகள்

இக்கோவிலில் பக்தர்கள் ஆயுள் விருத்திக்காக வேண்டிக்கொள்கிறார்கள். இதற்காக உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்டம்

அதனைத் தொடர்ந்து தினமும் சாமி வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியாக எழுந்தருளினர்.

இதனையடுத்து மேல வீதியில் இருந்து காலை 9 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டது. தேர் வடக்கு வீதி, கீழவதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேல வீதியில் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாகிகள், கோவில் குருக்கள், கிராம மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தையொட்டி பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story