தென்பரை மழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாஇன்று நடக்கிறது


தென்பரை மழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாஇன்று நடக்கிறது
x
தினத்தந்தி 5 Feb 2023 1:00 AM IST (Updated: 5 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்பரை மழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

திருவாரூர்

நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்பரை மழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கோவில் தல வரலாறு

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே 81.தென்பரை கிராமத்தில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. 16-17-ம் நூற்றாண்டு காலத்தில் தென்பரை கிராமத்தில் இக்கோவில் உருவானதாக தலவரலாறு கூறுகிறது. கோவில் உள்ள இடத்தில் வாழ்ந்த முன்னோர்கள் காமாட்சியம்மன் மற்றும் காத்தவராய சுவாமிகள் வழிபாட்டை தொடங்கி உள்ளனர். பல ஊர்களில் இருந்தவர்கள் குலதெய்வ வழிபாட்டை இக்கோவிலில் தொடர்ந்துள்ளனர்.

இதனுடன் ராயர் ஆட்சி காலத்தில் மாரியம்மன் வழிபாடும் சேர்ந்துள்ளது. பிற்காலத்தில் மாரியம்மன், காளியம்மன், காத்தவராய சுவாமி, மதுரை வீரன், துர்க்கை அம்மன், பிடாரியம்மன், பேச்சியம்மன், கழுவடையான், இருளன் போன்ற தெய்வ வழிபாடுகள் நடைபெற தொடங்கின.

குடமுழுக்கு விழா

தென்பரை கிராமத்தில் உத்திராபதி மடத்தால் பண்ணையார் நிர்வாகத்தில் ஆவணியப்பன், மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு ஒரே நாளில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2009-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

தற்போது வடக்கு தென்பரை, உட்காட்டு தென்பரை, கட்டபுளி தென்பரை, தெற்கு தென்பரை, மேலக்காடு தென்பரை என 5 ஊர்களும் சேர்ந்து தென்பரை என்ற ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 ஊர் கிராம கமிட்டி மற்றும் தென்பரை ஊராட்சி மன்றம் இணைந்து தென்பரை மழைமாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருப்பணிகள்

அதன்படி கடந்த ஒரு ஆண்டு காலமாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதில் குலதெய்வ மருளாலிகள், கிராம மக்கள், வெளிநாடு வாழ் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இந்த கிராமத்தை சேர்ந்தோர் நன்கொடை அளித்து திருப்பணி நடைபெற்றது.

திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அதன்படி கடந்த 3 நாட்களாக கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை, நவகிரக ஹோமம், மகா பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி, நவசக்தி அர்ச்சனை, கோபூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தன.

இன்று நடக்கிறது

அதைத்தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டு குடமுழுக்கு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற உள்ளது.

குடமுழுக்கை தொடர்ந்து அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற வேண்டும் என தென்பரை கிராமத்தில் உள்ள திருப்பணி கமிட்டி மற்றும் ஊராட்சி மன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஏற்பாடுகள்

விழா ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் அமரஜோதி, செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் தியாக புவியரசன், தமிழரசன், உத்திராபதி, நாகராஜ், மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, ஆசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


Next Story