தஞ்சை கீழவாசல் ஒட்டக்கார தெருஉஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் குடமுழுக்குஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தஞ்சை கீழவாசல் ஒட்டக்கார தெருவில் உள்ள, நாடார்கள் உறவின்முறை மர்மபரிபாலன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட உஜ்ஜையினி மாகாளிஅம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை கீழவாசல் ஒட்டக்கார தெருவில் உள்ள, நாடார்கள் உறவின்முறை மர்மபரிபாலன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட உஜ்ஜையினி மாகாளிஅம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உஜ்ஜையினி மாகாளி அம்மன்
தஞ்சை கீழவாசல் ஒட்டக்கார தெருவில் உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மன் மிகுந்த சக்தி வாய்ந்தவளாகவும், மக்களின் வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவளாகவும், நம்பிக்கையோடு வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைப்பவளாகவும் அருள்பாலித்து வருகிறாள்.
தஞ்சை நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலின் மூலவர் சன்னதியின் இரு புறமும் உற்சவர் அம்மன், ஏனாதிநாயனார், வராகி அம்மன், சிவதுர்க்கை அம்மன், சரஸ்வதி, லட்சுமி, கல்யாண கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யப்பன், நாகம்மாள், ஆஞ்சநேயர், குபேரன், காலபைரவர், செல்வகணபதி ஆகிய 14 சன்னதிகள் உள்ளன.
கணபதி ஹோமம்
இந்த கோவிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் முழுமையும் புதிதாக வர்ணங்கள் பூசப்பட்டது. பல்வேறு திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கோவில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தன.
கடந்த 5-ந் தேதி கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி பூஜைகள் நடத்தப்பட்டன. 6-ந் தேதி தஞ்சை சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து 2 ஆயிரம் பெண்களுடன் புனிதநீர் ஊர்வலம் நடந்தது. 7-ந் தேதி முதல் கால யாக பூஜை தொடங்கியது. 8-ந் தேதி 2-ம் கால யாக பூஜை மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் 4-ம் கால யாக பூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும் நடந்தது.
குடமுழுக்கு
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு விக்கேஸ்வர பூஜையுடன் 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து காலை 9 மணி அளவில் மூலவர் உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு கடம் புறப்பாடு நடந்தது. மேளதாளங்கள், வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் கலசங்களை சிவாச்சாரியார்கள், கோபுரங்களுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. மூலவர் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டதும் அனைத்து கோபுரங்களிலும் குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பிரசாதம்
அப்போது கோவிலை சுற்றிலும் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினர். அதைத்தொடர்ந்து உஜ்ஜையினி மாகாளி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் டி.வெள்ளைசாமி நாடார் தலைமையில் நடந்த குடமுழுக்கு விழாவில் இணை தலைவர் டி.ராமமூர்த்தி நாடார், செயலாளர்கள் ஆர்.ராமமூர்த்தி நாடார், துரையரசன் நாடார், சாமிராஜ் நாடார், செல்வக்குமார் நாடார், பொருளாளர் வெங்கடேஷ் நாடார், சட்ட ஆலோசகர் மாணிக்கவேல் பாண்டியன் நாடார், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் பாண்டியன் நாடார், விஜயராஜன் நாடார், சோமசுந்தரம் நாடார், முருகேசன் நாடார், பாஸ்கரன் நாடார் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் பங்கேற்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை தஞ்சை நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்க தலைவர் டி.ராமமூர்த்தி நாடார் தலைமையில் திருப்பணி கமிட்டி தலைவர் டி.வெள்ளைச்சாமி நாடார் மற்றும் நிர்வாகிகள் கவுரவித்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோபுரத்தை வட்டமிட்ட கருடன்கள்; பக்தர்கள் பரவசம்
உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தபோது கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றுவதற்கு முன்பு 2 கருடன்கள் வட்டமிட்டு சென்றன. கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றிய பிறகு 4 கருடன்கள் ஒன்றாக வந்து வட்டமிட்டதை பார்த்து அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாகாளி... என பக்த கோஷங்கள் எழுப்பி பரவசம் அடைந்தனர். 4 கருடன்களும் ஒன்றாக கோபுரத்தின் மேல்பகுதியில் வட்டமிட்டதை பலர் தங்களது செல்போன் வீடியோவில் ஆர்வத்துடன் பதிவு செய்தனர்.
பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பு
குடமுழுக்கு முடிந்தவுடன் கோபுரங்களில் இருந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இந்த புனிதநீர் எல்லா பக்தர்கள் மீதும் விழாது என்பதால் அனைவர் மீதும் புனிதநீர் படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதாவது குடமுழுக்கு நடந்தபோது கோபுரத்தில் இருந்து வடிந்த புனிதநீரை பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகளில் பிடித்தும், குடங்களில் இருந்த புனிதநீரை பெற்றும் ஏற்கனவே பெரிய அளவிலான பிளாஸ்டிக் டிரம்களில் கலக்கி வைத்து இருந்த மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் கலந்தனர். புனிதநீர் கலக்கப்பட்ட மஞ்சள் நீர் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. மேலும் குடமுழுக்கு முடிந்த பிறகு கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்த பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம்
குடமுழுக்கு நிறைவடைந்ததும் விழாவுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள 2 வீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் வரிசையாக சென்று அன்னதானம் வாங்கி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் எந்தவித நெரிசலும் இன்றி பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அன்னதானத்தை பெற்று சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் குடமுழுக்கு முடிந்ததும் மஞ்சள் கயிறு, குங்குமம், விபூதி அடங்கிய பிரசாதம் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.