பெருமாள் கோவில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நீண்ட வரிசையில் பக்தர்கள்
பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாத வழிபாடு திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடந்து வருகிறது. நேற்று மாதத்தின் 3-வது சனிக்கிழமையையொட்டி அனைத்து கோவில்களிலும் காலை முதல் இரவு வரைக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. வீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலையில் சிறப்பு பூஜைக்கு பின்னர் உதய கருடசேவை நடந்தது. இதில் வீரராகவப்பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவீதி உலாவிற்குப்பின் கோவிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த வீரராகவப்பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். காலை முதல் இரவு வரைக்கும் கோவிலுக்கு திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோவிலின் வெளியே அதிக அளவிலான தாசர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் அரிசி, காய்கறி மற்றும் தானியங்களை வழங்கி ஆசி பெற்றனர்.
அன்னதானம்
25-வது ஆண்டாக புரட்டாசி சனி வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து வரும் பிரதோஷ வழிபாட்டுக்குழு சார்பில் நேற்று பெருமாள் கோவிலில் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள வேறு சில பெருமாள் கோவில்களிலும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் திருப்பதி கோவிலில் காலை முதல் இரவு வரைக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. வெங்கடேசபெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இங்கு அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. குருவாயூரப்பன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு அலங்காரம்
ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் காலை முதல் இரவு வரைக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில்வழியில் உள்ள பெரும்பண்ணை வரதராஜப்பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இங்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த நிலையில் கோவில் வளாகத்தில் உற்சவமூர்த்திக்கு பெரிய மேடை அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் சயன கோலத்தில் ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு துளசி, லட்டு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.