மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை

பரமத்திவேலூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்து தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நேற்று பரமத்தி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இன்ஸ்பெக்டர் இந்திராணி, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் திருவிழாவை நடத்த கிராமமக்கள் ஒப்புக்கொண்டனர். அதன்படி மாரியம்மன் கோவில் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதி வரை நடத்துவது. அடுத்த மாதம் 3-ந்் தேதி வடிசோறு நிகழ்வு அன்று மாலை 4 மணியில் இருந்து 7 மணி வரை தேருக்கு பூஜை செய்வது. 4-ந்் தேதி தேரோட்டம் நடக்காது. காலை 11 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் தேரோட்டத்தை முடிக்க வேண்டும். தேருக்கு 50 பேர் மட்டும் சன்னகட்டை போட வேண்டும். இவர்களுக்கு கோவில் சார்பில் அச்சிடப்பட்ட வெள்ளை நிறத்தில் பனியன்கள் வழங்க வேண்டும். அதில் வரிசை எண் குறிப்பிட வேண்டும். மேலும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தேர் இழுப்பவர்கள், சன்னக்கட்டை போடுபவர்கள் மது அருந்தக்கூடாது. கோவில் சார்பாக தேருக்கு முன்புறமும், பின்புறமும் வீடியோ எடுக்க வேண்டும். பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளை நடத்தக்கூடாது. கோவில் பகுதியில் பேனர்கள் வைக்க கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.






