திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணி அளவில் கணபதி மற்றும் ரிஷப ஹோமம் நடந்தது. அதன்பின் 9 மணியளவில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ரிஷப கொடி ஏற்றி கொடியேற்றம் நடந்தது. பின்னர் ஞானாம்பிகை-காளகத்தீசுவரர், அபிராமி அம்மன்- பத்மகிரீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணியளவில் கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் திண்டுக்கல் நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி அளவில் திருக்கல்யாணமும், சிகர நிகழ்ச்சியாக 3-ந் தேதி மாலை 6 மணியளவில் தேரோட்டமும் நடக்கிறது. 4-ந் தேதி காலை 10 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்று சித்திரை திருவிழா நிறைவடைகிறது. திருவிழா நாட்களில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ரிஷபம், யானை, அன்னம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.