புரட்டாசி 3-வது சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஏழுமலையான் கோவில்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும் உற்சவராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். அது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.
இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகிற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை யொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் மலை அடிவாரப் பகுதிக்கு வருகை தந்தனர்.
சிறப்பு பூஜை
பின்னர் கோவிந்தா கோஷத்துடன் விடிய விடிய மலையேறிச் சென்று தேங்காய், பழம் கலந்த அவுளை ஏழுமலையானுக்கு படைத்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அத்துடன் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றிலும் பக்தர்கள் வருகை தந்தனர். இதே போல் உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோவில், நவநீதகிருஷ்ணன் கோவில், சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட உடுமலை பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.