உடுமலை மாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்


உடுமலை மாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
x

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பூர்

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

புதிய தேர்

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ேதரோட்ட திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த நிலையில் மாரியம்மன் கோவிலில் இருந்த பழமையான தேருக்குப் பதிலாக எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி காலை 9.45 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் வெள்ளோட்ட நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தைத் தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெற்றது. மதியம் 1 மணியளவில் புதிய தேர் கும்ப ப்ரோக்க்ஷனம், ஸ்தாபனம், பலிதானம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேரோட்டம்

இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில், கும்ப கலசத்தில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவர் மற்றும் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டத்தை பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், உடுமலை நகரமன்றத் தலைவர் மத்தீன், உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன், பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ் ஸ்ரீதர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு உதவியாக தேரை இழுக்க பொக்லைன் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, சதாசிவம் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. வழி நெடுக ஏராளமான பக்தர்கள் புதிய தேரை பார்ப்பதிலும் படம் பிடிப்பதிலும் ஆர்வம் காட்டினர். துணை போலீஸ் சூப்பிரண்டு கோபால கிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story