தஞ்சை மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு
தை அமாவாசையையொட்டி தஞ்சை மேலவீதி மூலை அனுமார் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்;'
தை அமாவாசையையொட்டி தஞ்சை மேலவீதி மூலை அனுமார் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மூலை அனுமார் கோவில்
தஞ்சை மேலவீதியில் பிரசித்தி பெற்ற மூலை அனுமார் கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில் மூலை அனுமார் கிழக்கு நோக்கியபடியும், முகம், கால்கள் வடக்கு நோக்கியும் அமைத்திருப்பது தனி சிறப்பாகும்.மேலும், அனுமாரின் தலைக்கு மேல் அமைந்துள்ள வாலில் சனீஸ்வரபகவான் உள்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள மூலை அனுமார் கோவிலில் தை அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
தை அமாவாசை
இதையொட்டி காலை10 மணிக்கு சாமிக்கு தேங்காய் துருவலால் அபிஷேகமும், பாலாபிஷேகமும் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வாழைப்பழ அலங்காரமும், 1,008 எலுமிச்சம் பழங்களால் மாலையும் அணிவிக்கப்பட்டது.தை அமாவாசை சனிக்கிழமை வருவது அரிது என்பதால் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.