முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
குத்தாலம் அருகே ஆனைமேலகரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
குத்தாலம்;
குத்தாலம் அருகே ஆனைமேலகரம் கிராமம் நத்தமேட்டுத்தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 14-ம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா, கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தன காப்பு, கஞ்சிவார்த்தல், திருவிளக்கு பூஜை நடந்தது. மேலும் கற்பக விநாயகர், பாலமுருகன், பேச்சியம்மாள், வீரனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கரகம் காவடி, பால்குட உற்சவ திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் மல்லியம் காவிரி ஆற்றங்கரையில் இருந்து மேள வாத்தியங்கள் வாண வேடிக்கைகள் முழங்க காளி ஆட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.