62 பேருக்கு அறங்காவலர் குழு உறுப்பினர் ஆணை


62 பேருக்கு அறங்காவலர் குழு உறுப்பினர் ஆணை
x

62 பேருக்கு அறங்காவலர் குழு உறுப்பினர் ஆணை

திருப்பூர்

திருப்பூர்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் 62 பேருக்கு உறுப்பினர் ஆணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

62 பேருக்கு உறுப்பினர் ஆணை

திருப்பூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முதல்கட்டமாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் 62 பேருக்கு உறுப்பினர்களுக்கான ஆணைகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தையும், ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிராமப்புற திருக்கோவில் திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் திருக்கோவில்களின் திருப்பணிக்கு ஆண்டுதோறும் அரசு நிதியுதவியாக ஒரு கோவிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 20 கோவில்களின் திருப்பணிக்காக ஒரு கோவிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதி திருக்கோவில்களின் திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 60 கோவில்களின் திருப்பணிக்கு ஒரு கோவிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர்கள் செந்தில்குமார், முத்துராமன், கலைச்செல்வி, ஜெகநாதன்சாமி, திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், செயல் அதிகாரி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



Next Story