ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்


ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Sept 2023 12:45 AM IST (Updated: 14 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

விருதுநகர்

சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பொத்துமரத்து ஊருணி

சிவகாசி பஸ் நிலையம் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணியின் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 14-ந் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில் வணிக நோக்கத்துடன் செயல்பட்ட 13 கட்டிடங்கள் உள்ளிட்ட 15 கட்டிடங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இந்த 15 கட்டிடங்களும் இன்று இடித்து அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை

அடுத்த கட்டமாக ஊருணியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை யில் இறங்கியபோது அப்பகு தியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் செல்வின் ஏசுதாஸ், பைக்பாண்டி மற்றும் சிலர் தாசில்தார் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தானாக முன்வந்து அகற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான நோட்டீஸ் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.


Next Story