முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - நவம்பர் 8-ந்தேதிக்கு ஒத்திவைப்பு


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - நவம்பர் 8-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 28 Oct 2022 7:08 PM GMT (Updated: 30 Nov 2022 3:13 AM GMT)

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணையை நவம்பர் 8-ந்தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

சென்னை,

முன்னாள்அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில், "ஒளிவு மறைவின்றி டெண்டர் கோரப்பட்டது. இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை" எனவும் முதற்கட்ட விசாரணைக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும், வழக்கு பதிய அனுமதி பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்த போது மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை வெளியானதாகவும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்பகட்டம் என்றும், ஆரம்பகட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தினார். இந்த வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் 8-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story