தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்
தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளரை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
தென்காசி,
மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்று பேசினார்.
அவர் பேசி முடித்த பின்னர், மழை வருவது போன்று உள்ளதால், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடருங்கள் என்று கூறி விட்டு மேடையில் இருந்து இறங்க முயன்றார்.
அப்போது அவரிடம் இருந்த மைக்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி பிடுங்கியவாறு ஆவேசமாக சத்தம் போட்டார். மணிப்பூரை பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? என்று கூறி மாவட்ட செயலாளரை ஒருமையில் பேசியதாக தெரிகிறது.
இதற்கு அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இரு தரப்பினரையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சமாதானப்படுத்தினார். பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவியை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சம்பவ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இதனை கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். கட்சியின் மகளிரணி ஆர்ப்பாட்டத்தின்போது, பெண் நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக ஜெயபாலன் நியமிக்கப்பட்டு உள்ளார்.