தென்காசி: இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்: ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


தென்காசி: இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்: ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x

குருத்திகாவை 2 நாள் காப்பகத்தில் வைத்து, ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் வினித்-குருத்திகா. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து குருத்திகாவை அவரது பெற்றோர்கள் கடத்திச்சென்ற வீடியோ வைரலானது. இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருத்திகாவை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குருத்திகா வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருந்தார். அதில் கிருத்திகா தனக்கு வேறு திருமணம் ஆகி விட்டதாகவும் தான் பெற்றோருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறும் வீடியோ இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தன் விருப்பத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை என கிருத்திகா கூறியிருந்தார்.

இதனை கண்டு பதறிப்போன வினித், தன் மனைவி கிருத்திகா முழு சம்மதத்துடனே தன்னை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களது பெற்றோரே மிரட்டி வேறு திருமணம் செய்து வைத்ததாகவும், மிரட்டியே கிருத்திகாவை வீடியோ பதிவு செய்ய வைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார். மேலும், மனைவி வெளியிட்ட வீடியோவில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தன் மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சூழலில் கிருத்திகா மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தான் நலமாக உள்ளதாகவும், தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்த கிருத்திகா, தன்னை வைத்து தந்தையிடம் பணம் பறிப்பதற்காக இப்படி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் இலஞ்சி கிராமத்தில் இளம்பெண் குருத்திகா கடத்தப்பட்ட விவகாரம் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அதில் குருத்திகாவை 2 நாள் காப்பகத்தில் வைத்து, ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் வழக்கு குறித்து காவல்துறையினர் முழு விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் செய்யவேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் அவர்களது பெற்றோர், உறவினர்கள், வழக்கறிஞர்கள் முதற்கொண்டு யாருமே சந்திக்கக்கூடாது, விசாரணைக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் இந்த பெண்ணிற்கும் குஜராத்தை சேர்ந்த நபருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்ததாக பெண்வீட்டார் தரப்பில் கூறுகின்றனர். அதற்கு திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் புகைப்பட ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால் திருமணம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டபிறகு, நீதிபதிகள் சம்மந்தப்பட்ட பெண்ணை 2 நாட்கள் காப்பகத்தில் வைக்க உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story