சார்நிலை கருவூலத்தில் ரூ.29 லட்சம் கையாடல் செய்த கணக்கர் பணிநீக்கம்
சார்நிலை கருவூலத்தில் ரூ.29 லட்சம் கையாடல் செய்த கணக்கர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதிகாரிகள் ஆய்வில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சார்நிலை கருவூலத்தில் ரூ.29 லட்சம் கையாடல் செய்த கணக்கர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதிகாரிகள் ஆய்வில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:-
கையாடல்
முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக பணிபுரிந்து வருபவர் கீழத்தூவலை சேர்ந்த முனியசாமி. இவர் கடந்த மாதம் 7-ந் தேதி அலுவலகத்தில் ஓய்வூதிய கணக்கில் இருந்த ரூ.29 லட்சத்தை கருவூலக ரகசிய குறியீடை பயன்படுத்தி தனது பெயரிலும், தனது நண்பர் பெயரிலும் மாற்றி கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. கருவூலத்தில் நடைபெற்ற தணிக்கையின் போது இதை கண்டறிந்த சார்நிலை கருவூல உதவி அதிகாரி செய்யது சிராஜுதீன் அளித்த புகாரின் அடிப்படையில் கணக்கர் முனியசாமி மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.
மேலும், அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட கரூவூல அலுவலர் உத்தரவிட்டுள்ளார். முனியசாமி குரூப்-2 தேர்வு எழுதி பணியில் சேர்ந்தவர் என்பதும், அவரின் மனைவி அரசு பணியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மீதான விசாரணையை போலீசாரும், துறை அதிகாரிகளும் தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது பல தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த முனியசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்தான் முதுகுளத்தூருக்கு பணிமாறுதலாகி சென்றார். அங்கு 2 பெண் அலுவலர்களும், சார்நிலை கருவூல உதவி அதிகாரியும் முனியசாமியும்தான் பணியாற்றினர். கரூவூல கணக்கில் உள்ள பணத்தினை 2 பெண் அலுவலர்களும், முனியசாமியும் தனித்தனி ரகசிய எண்ணை பயன்படுத்தி பணபரிமாற்றம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார்த்திகை சமயத்தில் 2 பெண் அலுவலர்கள் விடுமுறையில் சென்றதால் அவர்களின் ரகசிய குறியீடு எண்ணை பயன்படுத்தி முனியசாமி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் அவர் ராமநாதபுரத்தில் 6 வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளதால் அங்கும் கையாடல் செய்துள்ளாரா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக மதுரை மண்டல துணை இயக்குனர் அலுவலக குழுவினர் ராமநாதபுரம் மாவட்ட கரூவூலத்தில் விசாரித்து வருகின்றனர். அங்கும் முனியசாமி பல லட்சம் கையாடல் செய்துள்ளதாக தெரியவந்தது.
வீடு, கார்
கொரோனா சமயத்தில் 50 சதவீத ஊழியர்கள் பணி மற்றும் ஓய்வூதியர்கள் நேரில் வர தேவையில்லை என்ற அறிவிப்பு முனியசாமிக்கு வசதியாக அமைந்துவிட்டதாக அலுவலக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் ஆய்வு முடிவில்தான் கையாடல் தொடர்பான முழுவிவரம் வெளியாகும். கையாடல் தொகை அதிகரித்து கொண்டே வருவதால் சென்னை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் குழுவினர் வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. கையாடல் செய்த பணத்தில் முனியசாமி வீடு, கார் உள்ளிட்டவைகளை வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இதற்கிடையே முதுகுளத்தூர் அலுவலகத்தில் கையாடல் செய்த பணத்தினை முனியசாமி கட்டிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.