ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்  - ஓ.பன்னீர்செல்வம்
x

ஆசிரியர்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

ஒரு நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதிலும், கிராமப்புறங்களில் மக்களிடையே நிலவும் அறியாமையை நீக்குவதிலும், சமூக, பொருளாதார மற்றும் சுகாதார நிலைகளை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கினை வகிப்பவர்கள் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட ஆசிரியர்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும். செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி என்பவர் பொதுமக்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறை பற்றியும் தனது முகநூல் பக்கத்தில் கட்டுரையாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது ஆசிரியரின் கடமை. அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், தி.மு.க. அரசு தன் கடமையை செய்யாமல், குறை கூறிய ஆசிரியரின் குரல்வளையை நெருக்கியிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் தனது கருத்துகளை ஆசிரியர் தெரிவித்து வருகிறார்.

ஆனால், இவர் எழுதிய கருத்துகள் தி.மு.க. அரசிற்கு எதிராக இருக்கிறது என்பதற்காக அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் ஆகும். அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரே சுட்டிக்காட்டும் அளவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் இருக்கிறது என்றால், அந்த அளவுக்கு மோசமான நிலைமை பள்ளிக் கல்வித் துறையில் நிலவுகிறது.

பள்ளிக் கல்வித் துறையில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல், குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை அடக்குவது என்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு. தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. கல்வித் துறையில் நிலவும் குறைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணவும், ஆசிரியரின் தற்காலிக பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்யவும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story