நாகர்கோவிலில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து


நாகர்கோவிலில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து
x

நாகர்கோவிலில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கூரை வெடித்து சிதறியதால் அங்கு பரபரப்பு உருவானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கூரை வெடித்து சிதறியதால் அங்கு பரபரப்பு உருவானது.

தீ விபத்து

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ்நிலையம் பின்புறம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனை அருகே ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. பணிமனையின் முன்புள்ள குடோனில் பஸ்களின் பழைய இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த குடோன் ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரையால் ஆனது.

நேற்று மதியம் 12.40 மணிக்கு குடோனில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனை பார்த்த போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் தீ மேலும் பரவாமல் இருக்க தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டு கடங்காமல் தீப்பற்றி எரிந்தது.

அந்த சமயத்தில் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

புகை மண்டலம்

இதற்கிடையே இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உதவி அதிகாரி துரை தலைமையில் 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 18 ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீைய அணைக்கும் பணியில் மும்முரமாக இறங்கினர்.

40 நிமிட போராட்டத்திற்கு பிறகு வீரா்கள் முற்றிலுமாக தீயை அணைத்தனர். எனினும் குடோனில் உள்ள பழைய பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தன.

ஓட்டலிலும் பாதிப்பு

இந்த தீ விபத்து காரணமாக அருகில் உள்ள அண்ணா பஸ் நிலையம் மற்றும் மீனாட்சிபுரம் சாலை பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே அச்சம் நிலவியது.

தீ விபத்தால் பணிமனையை அடுத்துள்ள ஓட்டல் ஒன்றின் ஒருபுறமும் எரிந்து சேதம் அடைந்தது. அந்த ஓட்டலின் கண்ணாடிகள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களும் சேதமாகின.

காரணம் என்ன?

தீ விபத்து குறித்து விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் கோட்டார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து குறித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், பணிமனையை ஒட்டியுள்ள ஓட்டலின் மாடியில் சில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அதில் உள்ளவர்கள் யாரேனும் பீடி, சிகரெட்டை குடித்து விட்டு குடோன் மீது போட்டிருக்கலாம். மேலும் உணவு சமைக்கும் புகைக்கூண்டும் மேலே தான் உள்ளது. இதிலிருந்து தீ கனல்கள் வெளியேறி அருகில் உள்ள குடோனில் விழுந்திருக்கலாம். அதே சமயத்தில் குடோனில் மின் கசிவிற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அங்கு மின் இணைப்பு இல்லை. இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் கொடுத்துள்ளோம். விசாரணையின் முடிவில் தீ விபத்துக்கான காரணம் என்வென்று தெரியவரும் என்றனர்.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்யகுமார், மேயர் மகேஷ் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்


Next Story