சருவ மலையில் பயங்கர தீ


சருவ மலையில் பயங்கர தீ
x
தினத்தந்தி 23 Feb 2023 1:00 AM IST (Updated: 23 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

மோகனூர்:-

மோகனூர் அருகே சருவ மலையில் பயங்கர தீ ஏற்பட்டது. இதில் ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.

சருவ மலை

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்துக்கும், கால்நடை மருத்துவ கல்லூரிக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திலும், 2 கிலோ மீட்டர் அகலத்திலும் சருவ மலை உள்ளது. இந்த மலையை சுற்றி அணியாபுரம், தோளூர் எம்.ராசாம்பாளையம், மணியாரம்புதூர், கணவாய்பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன.

இந்த சருவ மலையில் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. இந்த மலையை சுற்றி வசிக்கும் கிராம மக்கள், தங்களது கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக இந்த சருவ மலையை பயன்படுத்தி வருகின்றனர்.

திடீர் தீ

இந்த மலையில் நேற்று மாலை அணியாபுரம் கொங்குளத்தூர், மாரியம்மன் கோவில் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் இந்த தீ மளமளவென எரிந்து சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதனால் சருவ மலையில் உள்ள ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.

தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். தீ எரிந்த பகுதி முழுக்க முழுக்க மலைப்பகுதி என்பதால் தீயணைப்பு வீரர்களால் அங்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் இந்த மலைப்பகுதியில் எந்த பகுதியிலும் சாலை வசதி இல்லை. இந்த தீ விபத்தால் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்று அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story