திருமங்கலம்: ரேஷன் கடையில் பயங்கர தீ; இலவச வேட்டி-சேலைகள் எரிந்து நாசம்


திருமங்கலம்: ரேஷன் கடையில் பயங்கர தீ; இலவச வேட்டி-சேலைகள் எரிந்து நாசம்
x

இந்த கடை மூலம் 600 குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இதன் கட்டிடம் சேதம் அடைந்து இருப்பதால் அங்குள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் 6 மாதத்திற்கு மேலாக இயங்கி வருகிறது.

இந்த கடை மூலம் சின்ன உலகாணியில் உள்ள 600 குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பூட்டப்பட்டு இருந்த ரேஷன் கடைக்குள் இருந்து திடீரென புகை வந்தது. அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது ரேஷன் கடைக்குள் தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து கிராம மக்கள் தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. தீ மளமளவென பரவியதால் கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை ஓரளவு கட்டுப்படுத்தினர். தொடர்ந்து தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ரேஷன் கடை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சாக்குகளில் தீ பற்றியது தெரிய வந்தது.

இதனால் உள்ளே இருந்த சாக்குகளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் 2,500-க்கும் மேற்பட்ட சாக்குகளும், நூற்றுக்கும் மேற்பட்ட அரசின் இலவச வேட்டி-சேலைகளும் தீயில் கருகின. ரேஷன் கடையில் 2 மண்எண்ணெய் பேரல்கள் இருந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த கள்ளிக்குடி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story