திருவொற்றியூரில் பயங்கரம்; குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை - 2 பேர் கைது


திருவொற்றியூரில் பயங்கரம்; குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை - 2 பேர் கைது
x

திருவொற்றியூரில் குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

மணலி, எட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் ஜோதி என்ற ஜோதீஸ்வரன் (வயது 23). இவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஜோதீஸ்வரன் திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில் மீனவர்கள் பயன்படுத்தும் ஒரு குடிசையில் தூங்கினார்.

நள்ளிரவு 2 மணியளவில் வந்த மர்ம நபர்கள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த ஜோதீஸ்வரனை தரதரவென இழுத்துசென்று அவரது முகத்தில் கத்தியால் கொடூரமாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய ஜோதீஸ்வரனை ஓட ஓட விரட்டிச்சென்று வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஜோதீஸ்வரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அந்த கும்பல் அங்கு நின்றுகொண்டு இருந்த ஆடு ஒன்றையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த ஆடு சத்தமிட்டதால் அருகில் உள்ளவர்கள் திரண்டு வந்தனர். அப்போது மர்ம கும்பலை பிடிக்க முயன்ற மணிமாறன் என்பவரின் கையில் வெட்டிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஜோதீஸ்வரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கையில் காயம் அடைந்த மணிமாறன், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கொலையுண்ட ஜோதீஸ்வரன் உடலும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்துக்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது எண்ணூர் விரைவு சாலை வரை ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதற்கிடையேஇந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அபினேஷ் (20), சுனில் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் ஜோதீஸ்வரனை வெட்டிக்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

நேற்று முன்தினம் இரவு ஜோதீஸ்வரன் திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த நண்பர் ஒருவரை சந்திக்க வந்து உள்ளார். பின்னர் அவர்கள் அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து மதுகுடித்த போது அவ்வழியே வந்த அபினேஷ், சுனில் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இரவில் ஜோதீஸ்வரனின் நண்பரும் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் ஜோதீஸ்வரன் மட்டும் கடற்கரையில் மீனவர்கள் பயன்படுத்தும் குடிசையில் தூங்கி இருக்கிறார். இதனை கேள்விப்பட்ட அபினேஷ், சுனில் ஆகியோர் நள்ளிரவில் வந்து ஜோதீஸ்வரனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. கைதான 2 பேரிடமும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடற்கரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story