மோகனூர் காவிரி ஆற்றில் 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை


மோகனூர் காவிரி ஆற்றில் 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை
x

மோகனூர் காவிரி ஆற்றில் நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

அமலாக்கத்துறை அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு, வளையப்பட்டி சாலை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்ட விரோதமாக மணல் விற்பனை மேற்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 12-ந் தேதி 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் சேமிப்பு கிடங்கில் சோதனை நடத்தினர். அப்போது ஆற்றில் இருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது, எவ்வளவு மணல் விற்கப்பட்டுள்ளது, அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது, அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

2-வது முறை சோதனை

பின்னர் கடந்த 10-ந் தேதி அமலாக்கத்துறையினர் 9 பேர், இரண்டு குழுக்களாக பிரிந்து, குவாரியில் 'டிரோன்' மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் கோரக்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட அளவீட்டாளர்கள், திருச்சி பொதுப்பணித்துறை உதவி கோட்ட அலுவலர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சங்கீதா ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று 2-வது முறையாக இரண்டு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், மோகனூர் காவிரி ஆற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்றில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? என டிஜிட்டல் முறையில் கணக்கீடு செய்தனர்.

அப்போது திருச்சி நீர்வளத்துறை முதுநிலை கோட்ட பொறியாளர் செல்லமுத்து மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் இருந்தனர்.


Next Story