மாவட்ட திட்ட இயக்குனர் வீட்டில்லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை


மாவட்ட திட்ட இயக்குனர் வீட்டில்லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
x

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் தர்மபுரி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

மாவட்ட திட்ட இயக்குனர்

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக கடந்த 2019-2021-ம் ஆண்டில் பணிபுரிந்தவர் ஆர்த்தி (வயது 40). இவர் தற்போது வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வீடு தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டியில் உள்ளது.

திட்ட இயக்குனர் ஆர்த்தி கடந்த 1.4.2019-ம் ஆண்டு முதல் 31.3.2022-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முக்கிய ஆவணங்கள்

இந்த நிலையில் நார்த்தம்பட்டியில் உள்ள ஆர்த்தியின் வீட்டில் நேற்று காலை தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 9 மணி வரை 3 மணி நேரம் நடந்தது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் வீட்டிலும் சோதனை

இதற்கிடையே ஆர்த்தி வேலூரில் பணிபுரிந்து வருவதால் அவர், வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்த பங்களாவிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையில் அதிரடியாக நேற்று காலையில் நுழைந்து சோதனைநடத்தினர்.

வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனை நடத்தப்பட்டது. மாலை 5 மணி வரை இந்த சோதனை நீடித்தது. சோதனையின் போது இங்கும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதேபோல் திட்ட இயக்குனர் ஆர்த்தியின் தந்தை கலைமணி வீடு திருச்சியில் உள்ளது. அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட கணவர்

இந்தநிலையில் ஆர்த்தியின் கணவர் ஆனந்தமூர்த்தி (46) பொம்மிடி வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த போது, சரிவர பணிக்கு வராமல் இருந்தது மட்டும் அல்லாமல், அவர் மீதும் முறைகேடு புகார் கூறப்பட்டது. இதனால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு ஆனந்தமூர்த்தி கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதன்பிறகு ஆனந்தமூர்த்தி, தர்மபுரி அருகே உள்ள நார்த்தம்பட்டியிலும், ஆர்த்தி வேலூரில் உள்ள அரசு பங்களாவிலும் வசித்து வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story