நிபா வைரஸ் பரவலை தடுக்க சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்:பொதுமக்கள் வலியுறுத்தல்
நிபா வைரஸ் பரவலை தடுக்க சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கேரளாவில் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக நிபா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழக-கேரள எல்லைப்பகுதியான கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் குமுளி, போடிமெட்டு, கம்பமெட்டு எல்லைப்பகுதியில் நிபா வைரஸ் தடுப்பு முகாம் அமைத்து சுகாதாரத்துறையினர் கண்காணிக்க மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்படி கம்பம்மெட்டு செல்லும் சாலை 18-ம் கால்வாய் பகுதியில் நிபா வைரஸ் தடுப்பு முகாம் கடந்த 13-ந்தேதி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
அதன்படி, சுகாதாரத்துறையினர் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் அந்த வாகனங்களில் வந்தவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என டிஜிட்டல் தெர்மோ மீட்டர் மூலம் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் எந்த சோதனையும் மேற்கொள்ளவில்லை. கேரளாவில் நிபா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தாத நிலையில், அங்கிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்யாமல் இருப்பதால் தமிழகப்பகுதியில் நோய் பரவும் சூழல் உள்ளது. எனவே கேரளாவில் நிபா வைரசை கட்டுப்படுத்தும் வரை சுகாதாரத்துறையினர் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.