பணி நியமன தேர்வுக்கு எதிர்ப்பு: தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியர் நியமனத்துக்கு புதிய முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்றும், பணிநியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தக்கூடாது என்றும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அரசாணை ரத்துசெய்யப்படும் என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்றக்கோரியும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த 9-ந்தேதியில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கத்தின் மாநில தலைவர் கபிலன் சின்னசாமி, மாநில செயலாளர் ப.க.கார்த்திக், துணைத்தலைவர் மு.வடிவேலன் ஆகியோர் முன்னிலையில் நேற்று 3-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த அரசாணை கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்த அரசாணைக்கு எதிராக குரல் கொடுத்தார். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும். 2013 தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த அரசாணையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.