வறண்டு கிடக்கும் தடுப்பணைகள்


வறண்டு கிடக்கும் தடுப்பணைகள்
x
திருப்பூர்


வனப்பகுதியில் தடுப்பணைகள் வறண்டு கிடக்கின்றன. பருவமழையை எதிர்பார்த்து அணைகள் காத்துக்கிடக்கின்றன.

வனவிலங்குகள்

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கொடுத்து அடைக்கலம் அளித்து வருகிறது. ஆனாலும் வறட்சி காலத்தில் ஏற்படுகின்ற தண்ணீர் பற்றாக்குறையால் உணவு மற்றும் குடிநீரை தேடிக்கொண்டு வனவிலங்கு அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

விலங்குகள்-மனித மோதல்

அப்போது வாகன போக்குவரத்து காரணமாக உடுமலை-மூணார் சாலையை கடந்து அமராவதிஅணைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வன விலங்குகள் மனித மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

அதைத் தொடர்ந்து மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை சார்பில் தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டது. கோடை காலத்தில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதுடன் தடுப்பணையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வனவிலங்குகள் சாலையை கடப்பதற்கான அவசியம் எழவில்லை.

தடுப்பணைகள் வறண்டன

அவற்றில் தேங்கி உள்ள தண்ணீரை குடித்து விட்டு வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் சென்று விடுவது வாடிக்கையாக இருந்தது. இந்த சூழலில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. இதனால் அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

இதன் காரணமாக தண்ணீரைத் தேடிக் கொண்டு வரும் வனவிலங்குகள் உடுமலை-மூணாறு சாலையை கடந்து அணைப் பகுதிக்குள் சென்று வந்த வண்ணம் உள்ளது.பருவமழை பெய்யுமா?தடுப்பணைகள் நிரம்புமா? வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்பது இயற்கையின் கையில் தான் உள்ளது.


Next Story