முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா
கிணத்துக்கடவு, வால்பாறையில் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பொள்ளாச்சி
கிணத்துக்கடவு, வால்பாறையில் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
தைப்பூச திருவிழா
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் கோவில்களில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 18-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு 1,008 பால்குட ஊர்வலம், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து கொடிமுடி தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். 11 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி-தெய்வானையுடன் வால்பாறையின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தைப்பூச விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
கும்பாபிஷேகம்
நெகமம் ரங்கம்புதூர் ரோட்டில் உள்ள சின்னண்ணசாமி கோவிலில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நெகமம் தங்கவேல் அய்யன் கோவில், பல்லடம் ரோட்டில் உள்ள மாயாண்டீஸ்வரர் கோவில், செட்டியக்காபாளையம் பாலதண்டாயுதபாணி கோவில், பஜனை கோவில் என்ற முருகன் கோவில், சின்னநெகமம் மாரியம்மன் கோவில், கப்பளாங்கரை கண்டெடுத்த முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி-தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் திருவீதி உலா வந்தார்.
ராஜ அலங்காரம்
கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சாமி கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து வேலாயுத சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கோவில் கருவறையின் மற்றொரு பகுதியில் உள்ள வேலாயுத சாமி மலர் அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் அருள்பாலித்தார். பின்னர் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரிவெற்றிவேல்கோபண்ண மன்றாடியார் கலந்து கொண்டு அன்னதானத்தை வழங்கினார். இதேபோன்று சொக்கனூர் அருகே முத்து கவுண்டனூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் கிணத்துக்கடவு சிவலோகநாதர் உடனமர் சிவலோக நாயகி கோவிலில் உள்ள பால தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.